திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா(30) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூமாதேவி (26) இவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெருபந்தூர் அடுத்துள்ள மணிமங்கலம் காந்தி நகரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், படப்பை அடுத்துள்ள உரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கும் சுந்தர் என்ற நபருடன் பூமாதேவிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த 3 மாதமாக இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் தான் பூமாதேவி சுந்தருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு படப்பை அருகே சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த பூமாதேவியின் கணவர் சிவா அவர்களை பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டார் அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பூமாதேவி பின் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியானது.
ஆகவே இதனைப் பார்த்த சுந்தர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன் பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த பூமாதேவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் பூமாதேவியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு அவருடைய கணவர் சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.