நாகர்கோவில் காசி மீதுள்ள மேலும் இரண்டு வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி.போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடந்துவருகிறது.
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் சுஜி என்ற காசி (27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் கடந்த 2020-ம் வருடம் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக, ஆன்லைன் மூலம் குமரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் நாகர்கோவில் பகுதியை சோ்ந்த இளம்பெண் ஒருவரும் காசி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரித்ததில், காசி பேஸ்புக் மூலம் ஏகப்பட்ட இளம்பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரிந்தது.
இதனை தொடர்ந்து காசி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்றும், ஆரல்வாய்மொழியில் இரண்டு வழக்குகளும், நேசமணி நகரில் ஒரு வழக்கும், வடசேரியில் இரண்டு வழக்குகளும், என மொத்தம் எட்டு வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டது. இதில் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் பதிவான வழக்கு கந்து வட்டி வழக்காகும். மற்ற வழக்குகள் அனைத்தும் பெண்ணை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியது பாலியல் பலாத்காரம் போன்றவை ஆகும். இந்த வழக்குகள் அனைத்தும் குமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. காவல் துறைக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கில் காசியின் நண்பர்கள் இரண்டு பேர் காசிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே காசி செய்த தவறை மறைக்கும் வகையில் லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் இருக்கும் காசியும் அவரது தந்தை தங்கபாண்டியனும் பலமுறை ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் தங்க பாண்டியன் தரப்பில் மதுரை கோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கந்துவட்டி, போக்சோ போன்ற ஆறு வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சாட்சியங்களை சேகரிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி காவல்துறையினரிடம் கேட்டபோது, காசி மீதுள்ள எட்டு வழக்குகளில், இரண்டு வழக்குகளுக்கு மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் பலர் சாட்சி சொல்ல வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மேலும் வெளிநாட்டில் உள்ள நண்பரை கைது செய்யும் நடவடிக்கையும் துரித படுத்தப்பட்டுள்ளது என்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு காசி விவகாரம் மீண்டும் தலைதூக்க தொடங்கியதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.