கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்கலில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த இரு வருடமாக மூடப்பட்டு இருந்தது.
மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், இந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் மறுபடியும் உற்சாகமாகப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதேபோல கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால், கடந்த சில வருடங்களில் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இருப்பினும், மாநகராட்சிக்கு வெளியே இருக்கும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு எடுக்கும் நடவடிக்கை குறித்து சென்னை மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைப் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள 15 வது வார்டு முதல், 22வது வார்டு வரை நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம் மேயர் பிரியா தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்பேடி போன்ற பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்திற்குப் பின்னர் மேயர் பிரியா கூறுகையில், மாமன்ற உறுப்பினர்களின் சார்பாக ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் வெள்ளி தோறும் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை கூறலாம். அந்த குறைகளைத் தீர்க்க வழிவகைகள் செய்யப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைத்து அந்த பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் அதற்கான தீர்வு எடுக்கப்படும். ஒரு வருடத்திற்குள் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டு பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.