கோவையில் போதை ஊசி போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறையினர், வெளியிட்ட செய்தியில் கோவை மாவட்டம் மதுரக்கரை அருகே உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார் (20) என்பவர், பி.இ இரண்டாம் வருடம் படித்து வந்தார். எனவே, அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று அஜய்குமாருக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. இதனால் அவருடன் இருந்த அவரது நண்பர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அடுத்த அழைத்துச் சென்றனர். அங்கு அஜஎய்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அஜய் குமாரின் தந்தை சௌந்தர பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், இயற்கைக்கு முரணான மரணம் என மதுரைகரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அஜயகுமாரின் உடற்கூறு ஆய்வின் முடிவுவில், அஜய் குமாரின் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய ஊசிகளை போட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இது குறித்து கோவை மாவட்ட காவல் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இறந்த அஜய்குமார் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தண்ணீரில் கரைத்து சிரஞ்சின் மூலமாக போதைக்காக செலுத்திக்கொண்டது தெரியவந்தது.
அதன் பிறகு அஜய் குமாரின் நண்பர்களை விசாரணை செய்ததில், இந்த வலி நிவாரண மாத்திரைகளை கும்பகோணத்தில் உள்ள, ஒரு தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், அவரின் லாப நோக்கத்திற்காக இந்த மாணவனுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. எனவே இந்த வழக்கின் சட்ட பிரிவை மாற்றம் செய்து, போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக, முகமது பசுரை பஷீரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.