சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் சம்பவத்தை அடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர். அதன்பின்னர் அதிமுக கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற கோரி ஐகோர்ட்டில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி முறையீட்டுள்ளார். அதிமுக அலுவலக சீல் அகற்றும் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக ஐகோர்ட் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.