ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் (73). இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும், பதவிகளிலும் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகினார். இதனைத் தொடர்ந்து விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அக்கட்சியின் பெயரில் சுதந்திரத்தை குறிக்கும் ஆசாத் என்ற சொல் இடம்பெறும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத், தனிக்கட்சியை துவங்கியதுடன் அதன் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்துள்ளார். தனது கட்சியின் பெயர் ஜனநாயக ஆசாத் கட்சி என்று கூறிய அவர் மஞ்சள், வெள்ளை மற்றும் நீலம் உள்ளிட்ட மூவர்ணங்கள் கொண்ட கொடியையும் அறிமுகம் செய்துள்ளார்.
மேலும் தனது கட்சியின் பெயரில் ஜனநாயகம், அமைதி மற்றும் சுதந்திர தன்மை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டுமென விரும்பியதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். கட்சி தொடங்குவதற்கு முன்பு இது குறித்து வேறு எந்த கட்சிகளிடமும் ஆலோசிக்கவில்லை. இந்த புதிய கட்சி காந்திய கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மேலும் தனது அரசியல் பாதை சாதி அல்லது மதம் சார்ந்து இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.