தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மொறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார் இத்தகைய நிலையில், இவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி செல்ல முயன்றது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கு நடுவே கிராம நிர்வாக அதிகாரி அவருடைய அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று உள்ளே புகுந்த இருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். அதோடு, அப்போது என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் வழங்கலாம்? எனவும் ஒருவர் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கிராம நிர்வாக அதிகாரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிவாரணத்தை அறிவித்தார். அதோடு புறநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இதற்கு நடுவே முக்கிய குற்றவாளிகளான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து உள்ளிட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.
அதன் பேரில் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து உள்ளிட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.