திருநெல்வேலியை சேர்ந்த ஹரி நாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த சட்டசபை பொது தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம்கண்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் இந்த ஹரி நாடார். தொழிலதிபரான இவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார்.
ஹரி நாடார் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த இஸ்மாயில் பரகத் என்ற தொழிலதிபர் ஒருவர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு நெல்லை காவல்துறையினர் 1.50 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக ஹரிநாடார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2022 ஆம் வருடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.
ஆகவே இந்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கூறி இருக்கிறார்கள். இந்த தகவல் ஹரி நாடாருக்கு நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டது. அவர் மிக விரைவில் சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.