தனியார் பள்ளியில் படித்து வரும் ஐந்து வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் ஐந்து வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென சிறுமி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அழுது அடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை பள்ளிக்கூடம் போகுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி பள்ளிக்கூடம் செல்வதற்கு பயந்து அழுதுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் எதனால் நீ பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று சொல்கிறாய் என விசாரித்தனர். அதற்கு சிறுமி நான் வகுப்பறையில் இருந்து, மாடிப்படியில் கீழே இறங்கி வரும் போது ஸ்கூலில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (38) என்பவர், தன்னை சில இடங்களில் தொட்டு பேசுவது தனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அழுது உள்ளார்.
இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பள்ளி ஊழியர் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.