ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுகியில் கை, கால்கள், துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர், ஒருவரின் சடலம் கிடப்பதாக வானவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறும்போது, கொலை செய்யப்பட்ட நபர் இராணிப்பேட்டை மாவட்டம் பானாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவரான ரவுடி சரத்குமார் என்பது தெரியவந்தது.
சரத்குமார் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் சரத்குமாரை கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. இதில் தப்பித்து வந்த சரத்குமார், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சரத்குமார் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் தங்களை காவல்துறையினர் என கூறி திருவள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் விசாரணைக்கு சரத்குமாரை அழைத்து வர சொன்னதாக கூறி சரத்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாணாவரம் புதூர் மலைமேடு அருகே உள்ள சுடுகாடு ஓடையில் சரத்குமார் ஒரு கை, இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை இன்ஸ்பெக்டர் தீபா சத்யன், ராணிப்பேட்டை காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது.