இஸ்லாமிய மத இறைதூதர் முகமது நபிகள் பற்றி நூபுர் சர்மா தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா இருவரும் நூபுர் ஷர்மாவினுடைய கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதாகவும் அதனால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன, என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
பொதுவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பது வழக்கம் இல்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கில் மிக கடுமையான வார்த்தைகளை நீதிபதிகள் பயன்படுத்தி இருந்தனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழங்கிய கருத்து துரதிருஷ்டவசமானது என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், அனைவரும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும், வழக்கிற்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்றும், இதுபோன்ற கருத்துகள், நீதித்துறை கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இந்த கருத்து நீதித்துறையின் எல்லை மீறிய செயல் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.