தமிழகம் முதன்மை மாநிலமாக இல்லாவிட்டாலும் கடை நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.தமிழகத்தில் கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முதன்மை காரணமாக இருந்து வருவது மது மட்டும்தான். இந்த மது மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் இது போன்ற குற்ற செயல்களை மிகவும் சுலபமாக தடுத்து விடமுடியும்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், உரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(40). இவர் நேற்று நள்ளிரவு தன்னுடைய மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா(15), மோனிஷா(14), சிவசக்தி(6), மகன் தனுஷ்(4) உள்ளிட்ட 5 பேரை வெட்டி கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றொரு மகளான பூமிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக, இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த தகவல்தான். ஆனால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.