ட்விட்டரில், அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் இருக்கின்ற பிரபலங்களுக்கு தனி அடையாளமாக அவர்கள் பயன்படுத்தும் twitter பக்கத்தில் அதிகாரக் குறியீடு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதற்கு பின்னர் அந்த அதிகார குறியீட்டை பெறுவதற்கு கட்டணத்தை அறிவித்தார். ஒவ்வொரு கணக்குக்கும் 8 டாலர்களாக அந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இந்திய மதிப்பில் மாதந்தோறும் 657 ரூபாய் கட்டணம் செலுத்துவோருக்கு அந்த அதிகார குறியீடு வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிக்குப் பின்னர் கட்டணம் செலுத்தாதவர்களின் பக்கங்களில் இந்த அதிகாரக் குறியீடு நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.
இவ்வாறான சூழ்நிலையில், மாத கட்டணத்தை செலுத்தாமல் இருந்தவர்களின் கணக்குகளில் இருந்து அதிரடியாக அந்த அதிகாரக் குறியீட்டை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு மற்றும் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் பிரபலங்கள், போப் பிரான்சிஸ் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்பட உலகம் முழுவதும் பணம் செலுத்தாத ஏராளமான பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் அதிகாரக் குறியீடு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது