சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபடுபவரில் இளைஞர்களை விட முதியவர்கள் தான் அதிகமாக காணப்படுகிறார்கள். ஆனால் இது போன்ற பாலியல் அத்துமீறலை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழக காவல்துறையாலோ அல்லது தமிழக அரசாலோ இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
அந்த வகையில், கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(60). இவர் 16 வயது சிறுமி ஒருவரை சென்ற 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பான தகவலறிந்தவுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது பெரியசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இடும்பன்(31), சஞ்சீவ்(20) உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த உண்மையை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வழங்கிய புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.