கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜியை ஹுப்ளியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு பேர் கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளனர். சந்திரசேகர் குருஜி உடலில் 27 நொடிகளில் 60 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அதில் சந்திரசேகரை வரவேற்பது போல் இரண்டு பேர் சென்று, திடீரென அவரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் விரைந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், இந்த கொலையை செய்ததாக கூறப்படும் மஞ்சுநாத் மாரேவாட் மற்றும் மஹந்தேஷ் சிரூர் ஆகிய இருவரையும் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க்கா பகுதியில் கைது செய்தனர். அவர்கள் இருவருரையும் ஹூப்ளிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் லாபு ராம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பாகல்கோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் குருஜி மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது குடும்பத்தில் குழந்தை ஒன்று இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் ஹுப்ளி வந்திருந்தார். இந்த சமயத்தில் தான் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.சந்திரசேகர் குருஜியை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது ஒரு கொடூரமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.