விமான நிலையத்தை பொருத்தவரையில் அவ்வப்போது சுங்கவரி துறையினர் அதிரடி சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி நடைபெறும் சோதனைகள் பல்லாயிரக்கணக்கான வைரம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் கொழும்புவில் இருந்து நேற்று விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களுடைய உடமைகளையும் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானதால் அவர்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். இதில் அவர்கள் ரூபாய் 41.15 லட்சம் மதிப்பிலான 820 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து வந்த 2️ ஆண் பயணிகளிடமிருந்து 31 லட்சம் மதிப்பிலான 618 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியை கடந்து செல்ல முயற்சி செய்த ஏர் இந்தியா நிறுவன ஊழியர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1.28 கோடி மதிப்பிலான 2 கிலோ 555 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு கோடி மதிப்பிலான 3 கிலோ 993 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.