திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ சூட் எடுக்கும் தொழில் செய்து வருபவர், 23 வயதான இளமாறன். இவர் சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருகிறார். இளமாறன் தனது நண்பர் தீபக்குமார், சோனியா இருவரின் திருமண நாளுக்காக போட்டோ சூட் எடுக்க, மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். மேலும் இவர்களுடன் இவர்களது நண்பர்கள் தினேஷ் விஜய் பிரபா மற்றும் கார்த்தி என்று என மொத்தம் ஏழு பேர் வந்துள்ளனர்.
மெரினா பின்புறம் உள்ள மணல் பகுதியில் போட்டோ சூட் எடுத்து வந்தநிலையில், அங்கு வந்த கும்பல் ஒன்று, நீ எந்த ஏரியா என்று கேட்டு இளமாறனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் இளமாறனிடம் அவரது செல்போனை தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளனர். இளமாறன் செல்போனை கொடுக்காததால், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இருந்தும் இளமாறன் தனது செல்போனை கொடுக்காததால், அவரது இடது கையை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அரிவாளை காட்டி மிரட்டி அராஜகமாக பொதுமக்களிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த இளமாறனை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெரினா கடற்கரை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.