நேற்றைய தினம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இன்று மாலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஓட்டி உள்ள மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இது நாளை மறுநாள் வரையில் வடக்கு வடமேற்கு திசையில் நகரலாம். அதன் பின்னர் வடக்கு வடக்கிழங்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், மியான்மர் இடையே கரையை நோக்கி நகரலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல நாளை ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மேலும் நாளை மறுநாள் முதல் வரும் 13ஆம் தேதி வரையில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரையில் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் முதல், 37 டிகிரி செல்சியஸ். அதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை 26முதல் 27 டிகிரி செல்சியஸ்ஐ ஒட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.