தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய நிலையில், திண்டுக்கல்லில் நேற்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் சாரல் மழை பெய்திருக்கிறது. அதன் பிறகு அது கனமழையாகவும் அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது, வடமதுரை, அய்யலூர், தாமரைப்பாடி, பில்லம நாயக்கன் பட்டி, ஜம்புலிம்பட்டி, கம்பிலியம் பட்டி போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி, மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில் போன்ற பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதேபோல பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் போன்ற பகுதிகளில் 1 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பழனி பேருந்து நிலையம் ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. எரிச்சாலை, கீழ்பூமி, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாசாலை, உகார்த்தே நகர், செண்பகனூர், பெருமாள்மலை போன்ற இடங்களில் மழை பெய்தது சேலம் மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.