மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜாராம் யாதவ். இவரின் இரண்டு வயது இரண்டாவது மகன் ராஜாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே சிறுவனை அவனது தந்தை பூஜாராம் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுடன் சிறுவனின் அண்ணன் எட்டு வயது குல்சன் மருத்துவமனைக்கு சென்றான். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு சிறுவன் ராஜாவை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறுவனின் உடலை பெற்றுச்செல்லுமாறு கூறினர். பூஜாராம் அவருடைய ஊருக்கு செல்ல 30 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். ஆகவே ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு கேட்டார்.
அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் இப்போது ஆம்புலன்ஸ் எதுவும் இல்லை எனவே தனியார் ஆம்புலன்சுக்கு பணம் கட்டி கொண்டு செல்லுமாறு கூறினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சென்று கேட்டபோது பத்ரா கிராமத்துக்கு செல்ல ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அந்தத் தொகை அவரிடம் இல்லாததால் குறைந்த வாடகைக்கு வேறு வாகனம் பார்க்க பூஜாராம் சென்றார். இந்நிலையில் இறந்த சிறுவனின் உடலை அவனது மூத்த சகோதரன் குல்சனிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். சிறுவன் குல்சன் டவுன் பகுதியில் உள்ள நேரு பூங்கா அருகில் சாலையோரம் இறந்த தன்னுடைய ரெண்டு வயது தம்பியின் உடலை மடியில் கிடத்தி அமர்ந்திருந்தான். சுமார் அரை மணி நேரமாக இறந்த சகோதரனின் உடலை தன் மடி மீது வைத்து உட்கார்ந்து இருந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
பின்னர் காவல்துறையினர் ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து டிரைவரிடம் சிறுவனின் உடலை அவனது வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி கூறினர். இதுபற்றி பூஜாராம் கூறும்போது, நான் ஒரு ஏழை, மனைவி வீட்டில் இல்லாததால், அவன் என்ன சாப்பிட்டான் என்று எனக்கு தெரியவில்லை. அவனது உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். ஆனால் அவன் இறந்துவிட்டான். அவனது உடலை எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை என்று கூறினார். மொரேனா மருத்துவமனை மருத்துவர் வினோத் குப்தா கூறுகையில், அந்த சிறுவன் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தான் மேலும் கல்லீரலும் பாதிக்கப்பட்டிருந்தது. காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம் ஆனால் வாகனம் வருவதற்கு முன்பே, சிறுவனின் தந்தை சிறுவனின் உடலை எடுத்து க்கொண்டு வெளியே சென்று விட்டதாக கூறினார்.