ராஜஸ்தானில் தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தில் வசித்து வரும் கன்ஹயலால் (70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கிடந்தார்.
விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (35), தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், தனியாக குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார், மேலும் அவர் சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுத்தும் தந்தையின் இந்த செயல்கள் ஹேம்ராஜூக்கு பிடிக்கவில்லை.
மேலும், கன்ஹயலால் தனக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய மூத்த மகனுக்கு கொடுக்க விரும்பினார். இது ஹேம்ராஜூக்கு பிடிக்கவில்லை. மேலும் கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மரணத்திற்கு கன்ஹயலால் தான் காரணம் என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஹேம்ராஜ் தனது தந்தையை கொலை செய்து, அந்த கொலை பழியை இதற்கு முன்பு அவரை மிரட்டிய கிராமவாசிகள் மீது போடுவதற்கும் சரியான வாய்ப்பாக கருதி அவரை கொலை செய்துள்ளார். என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.