விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. நேற்று திறக்கப்பட்ட புதிய கடை அருகில் மத்திய சுங்க இலாகா அலுவலகமும், மேல்நிலைப்பள்ளியும், குடியிருப்புகளும் உள்ளன. கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அம்பேத்கர் நகரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அம்பேத்கர் நகர், பி.எஸ்.கே.மாலையாபுரம், திருவள்ளுவர் நகர், பச்சை காலனி மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரிய பாக்கியம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். டாஸ்மாக் கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நாளை அகற்றப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பின்பு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.