மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் மருந்து கடை வைத்துள்ளார். உமேஷ் கோல்கே நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மருந்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது ஒரு கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
உமேஷ் கோல்கே நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்தற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது கொலை மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளான இர்பான் கான், கால்நடை மருத்துவர் யுசுப் கான், உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். இதில் கால்நடை மருத்துவர் யூசுப் கான், கொலை செய்யப்பட்ட உமேஷ் கோல்கேவுக்கு பல வருடங்களாக நண்பர் என அவரது தம்பி மகேஷ் கோல்கே கூறியுள்ளார். யூசுப் கானை 2006- ஆம் வருடத்தில் இருந்தே தங்களுக்கு தெரியும் எனவும் மகேஷ் கோல்கே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உமேஷ் கோல்கே கொலை வழக்கில் சர்வதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்க உள்ளது. இதுகுறித்து அமராவதி கமிஷனர் ஆர்த்தி சிங் கூறுகையில், ” என்.ஐ.ஏ.க்கு வழக்கு மாற்றப்பட்டது குறித்து இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. திங்கள் கிழமை எங்களுக்கு அது தொடர்பான உத்தரவு வரும். அதன்பிறகே விசாரணை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். ” என்றார். எனினும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அமராவதி சென்று விசாரணையை தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.