தேனி மாவட்டம் ரத்தினம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடன் அலுவலகத்தில் தட்டச்சராக 24 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். பணியின்போது இளம் பெண் தன்னுடைய குடும்ப பொருளாதார நிலை தொடர்பாக ஜெயக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஜெயக்குமாரும் தான் உதவி செய்வதாக தெரிவித்து 2️ லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார்.
அதோடு கடன் கொடுப்பதை பயன்படுத்தி ஜெயக்குமார் தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்பொழுது இளம் பெண்ணும், ஜெயக்குமாரும் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை அவர் தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், கைபேசியில் வைக்கப்பட்டிருந்த அந்தரங்க புகைப்படங்களை தவறுதலாக இளம் பெண்ணின் உறவினரான நாராயண ராஜா என்பவருக்கு கிடைத்திருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு நாராயண ராஜா ஜெயக்குமாரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் வரையில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகின்றது.
ஆகவே பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அத்துடன் மிரட்டல் எடுத்து பணப்பறிப்பில் ஈடுபட்ட நாராயண ராஜா, வினோத், மாணிக்கம், பாபு உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.