எப்போதுமே டிசம்பர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். அதன் மூலமாக மழை மெல்ல, மெல்ல குறைந்திருக்கும். ஆனால் இந்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.சற்றேற குறைய இன்னும் 9 தினங்களில் ஜனவரி மாதம் பிறக்க உள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் இறுதியில் மழை குறைந்து, பனிப்பொழிவு அதிகமாக இருப்பது தான் வழக்கம். அதேபோல ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவும், குளிர் மட்டுமே அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். அதன் பின்னர் இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மூலமாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இன்று முதல் 23ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல வரும் 24ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கிறிஸ்மஸ் தினமான வரும் 25ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் பல பகுதிகளிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோன்று நாளை தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடை, இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம்.
மேலும் நாளை மறுநாள் மற்றும் 24ஆம் தேதி உள்ளிட்ட தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோரப் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம்.
வரும் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று தென் தமிழக கடலோர பகுதி, குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், நடு,நடுவே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசகூடும். தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கிழக்கு இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், நடுநடுவே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.