கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பெண் தன்னை ஒரு மந்திரவாதி நரபலி கொடுக்க முயற்சி செய்ததாக புகார் மனுவை வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை ஏடிஜிபிக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றன. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கேரளாவில் நரபலி தொடர்பான குற்ற சம்பவம் முயற்சி நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 2 நரபலி கொடுத்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பகுதியில் இருக்கின்ற எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனை தொழில் செய்து வந்த ரோஸ்லின், பத்மா உள்ளிட்ட இரு பெண்களை திருவல்லா பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தகவால் சிங், லைலா தம்பதியும், போலி மந்திரவாதி முகமது ஷாபி உள்ளிட்டோர் சதித்திட்டம் மூலமாக நரபலி கொடுத்திருக்கிறார்கள். இந்த சதி சம்பவம் பல மாதங்களுக்கு பிறகு அம்பலமான சூழ்நிலையில் மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் தான் இதே பகுதியில் மேலும் ஒரு நரபலி முயற்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன இந்த பெண்ணுக்கு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, கணவரை பிரிந்திருந்த சூழ்நிலையில், தங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் சில நண்பர்களிடம் அவர் பகிர்ந்து இருக்கிறார். இதனைக் கேட்ட ஒருவர் திருவல்லாவில் ஒரு மந்திரவாதி இருக்கிறார். அவரை சந்தித்து அவரிடம் பேசினால் தங்களுடைய பிரச்சனை நிச்சயமாக தீரும் என்று தெரிவித்திருக்கிறார்.
நண்பருடைய கருத்தை ஏற்றுக் கொண்ட அந்த பெண்மணி, கடந்த 8ம் தேதி கொச்சியிலிருந்து புறப்பட்டு திருவல்லாவில் இருக்கின்ற குட்டப்புழா என்ற பகுதியில் மந்திரவாதியை சந்தித்திருக்கிறார். அந்த மந்திரவாதி பெண்ணுக்கு சில சடங்குகளை செய்திருக்கிறார். அதன் பிறகு அந்த பெண்ணை நரபலி கொடுத்து விடலாம் என்று தன்னுடைய நண்பரும், மந்திரவாதியும் ரகசியமாக திட்டம் தீட்டியுள்ளனர். இதனை அந்த பெண் மறைந்திருந்து கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வந்த அந்த பெண், சில தினங்கள் பயந்து தலைமறைவாக இருந்திருக்கிறார். அதன் பிறகு தற்சமயம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நண்பர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் என்று கூறப்படுகிறது.