அடுத்து வரும் சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாகவே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அதிகாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது. கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திலும் சில விமானங்கள் தாமதமாக வந்தடைகின்றன. ரயில்களின் வேகமும் பனி காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை போலவே பிற மவட்டங்களிலும் அதிகாலையில் கடும் பனி நிலவி வருகிறது. நீலகிரியில் வழக்கம்போல் பனி கொட்டிக் கொண்டே இருக்கிறது.
அதேபோல, நாகை, தஞ்சை, கடலூர், விருத்தாசலம் என பல்வேறு மாவட்டங்களில் பனிப்படலங்கள் காணப்படுகின்றன. இதனால், நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு, பனி விலகிய பிறகே வாகன ஓட்டிகள் கிளம்பிச் செல்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் அடுத்த 5 நாட்களுக்குள் பனியின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், “வழக்கமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மாதங்கள் என்று சொல்லுவோம். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி உள்ளது. ஒரே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் வித்தியாசம் 10 டிகிரி உள்ளது.
பகல் நேரங்களில் நீர் நிலைகளில் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாக கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். இரவு நேரங்களில் மேகங்கள் அற்ற சூழ்நிலை இருக்கும் பொழுது வெப்பநிலை 21 டிகிரியாக மாறும்பொழுது நீர் துளிகள் காற்றில் உள்ள தூசிகளில் படிந்து காற்றின் வேகமும் இல்லாததால் இதுபோன்று மூடு பனி ஏற்பட்டு விடுகிறது. இன்னும் 5 நாட்களுக்குள் தமிழகத்தில் மூடு பனி குறைய வாய்ப்புள்ளது. வெயிலை பொறுத்தவரைக்கும் தமிழகத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். கடலோரப் பகுதிகள், உள்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள். கடற்கரை பகுதிகளில் கடற்காற்று வீசுவதால் வெப்பநிலை குறைவாக இருக்கும். உட்புற பகுதிகளில் இந்த காற்று வீசாததால் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். மலைப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கும். அந்த வகையில் பார்க்கும் பொழுது பிப்ரவரி இறுதியில் வரும் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை கணித்து அறிவிக்கப்படும்” என்றார்.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பில், வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.