அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பல்வேறு இடங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் சார்ந்த சில அறிவுரைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்ற வேண்டும். பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின் சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் திறந்தநிலை நீர்நிலைகள், பள்ளங்கள் அருகில் மாணவர்கள் செல்லாதவாறு வேலி அமைக்க வேண்டும். கிணறு மற்றும் நீர்நிலை தொட்டிகளில் மேற்புறம் முழுவதும் மூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் உணவு முற்றிலும் தூய்மையாகச் சமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.