இந்த உலகில் தூக்கத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது.. நாள் முழுவதும் உழைத்துவிட்டு, நிம்மதியாக தூங்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கு போதுமான தூக்கம் என்பது அவசியம்.. உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் தூக்கம் உதவுகிறது. எனவே ஒரு சராசரி மனிதனுக்கு 6-8 மணிநேர தூக்கம் தேவை.. நல்ல தூக்கம் இல்லை என்றால் சுறுசுறுப்பாக வேலை செய்வது கடினமாகிவிடும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், 61 ஆண்டுகளாக தூங்காத ஒரு மனிதன் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது உண்மை தான்.. வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு நபர், 1962 ஆம் ஆண்டு முதல் தான் தூங்கவில்லை என கூறும் யூடியூப் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

80 வயதாகும் தாய் னோக் (Thai Ngoc), என்ற முதியவர், சிறுவயதில் தனக்கு காய்ச்சல் வந்ததாகவும், அதன் பிறகு தன்னால் மீண்டும் தூங்கவே முடியவில்லை என்றும் கூறுகிறார்.. தன்னைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்களை போல அமைதியான தூக்கத்தைப் பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. ஆனால் 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் தனது தூக்கத்தை என்றென்றும் பறித்ததாக அவர் கூறுகிறார்.
தாய் னோக் தூங்குவதை இதுவரை பார்த்ததில்லை என்று அவரின் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தெரிவித்துள்ளனர்.. தூக்கமின்மை ஒரு நபரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது அவரது உடல்நிலையை பாதித்ததாக தெரியவில்லை. மருத்துவர்கள் பலரும் அவரின் தூக்கமின்மை நிலையை பரிசோதித்தனர்.. ஆனால் அதற்கான காரணத்தை யாராலும் கண்டறியமுடியவில்லை.. தாய் நோக் நல்ல உணவைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கிறார். க்ரீன் டீ குடிப்பார் என்றும் மதுவை விரும்பி குடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தூக்கமின்மையால் வாழ்க்கையில் வெறுமையை உணர்வதாக அவர் கூறுகிறார்.
ட்ரூ பின்ஸ்கி என்ற யூடியூபர் வியட்நாமில் தாய் னோக்கை தேடி அவரை கண்டுபிடித்தார். பிப்ரவரி 2 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ 3.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது.. ஒரு மனிதனால் ஏன் தூங்க முடியவில்லை என்பதற்கான காரணம் யாருக்கும் இல்லை என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
இதுகுறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.. ஒரு பயனர், “அவரது கதை வியட்நாம் ஊடகங்களில் சில காலமாக பரவலாக உள்ளது. நான் அவரைப் பற்றி சிறுவயதில் படித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இன்னும் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றூ குறிப்பிட்டுள்ளார்.. மற்றொரு பயனர் “அடிப்படையில் இந்த மனிதனுக்கு பூமியில் இதுவரை வாழ்ந்தவர்களில் அதிக நேரம் கிடைத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்..