தமிழகத்தில் புதிய மாநகராட்சியாக ஊட்டி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் அடுத்த படியாக சேலம் மாநகராட்சியும் திருப்பூர் மாநகராட்சியும் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய மாநகராட்சியாக ஊட்டி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் 510 உள்ளாட்சி அமைப்புகள், அருகேயுள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
ஏற்கனவே இருக்கும் மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. ஏற்கனவே இருக்கும் நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள், 196 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்படும் நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகள், 24 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்படும் ஊட்டி மாநகராட்சியில், ஊட்டி நகராட்சி, கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார், உல்லத்தி ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. மொத்தம், 5 நகராட்சிகள், 45 பேரூராட்சிகள், 460 ஊராட்சிகள், அருகேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட உள்ளன.