அதிமுகவில் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டமாக நீடித்து கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உட்பட 22 தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்குவதாக நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட நிர்வாகிகள் நீக்கப் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பி. வீ. ரமணா, பெஞ்சமின், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே. சி. கருப்பணன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட 44 பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ள ஓபிஎஸ், இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், ”கட்சி விரோத செயலில் ஈடுபட்ட காரணத்தினால் அனைவரும் நீக்கப்பட்டதாகவும் இதுவரை நீக்கப்பட்டவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், பொன்னையன் மட்டுமில்லாமல் ஜெயக்குமார் போன்ற மூத்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதால், விரைவில் பல மாற்றங்கள் நடக்கும் என தெரிவித்தார். மக்களவை உறுப்பினர் தருமர் ஓபிஎஸ் ஆதரவாக தான் உள்ளார் என்றும் அவர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.