அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொரு துறை வாரியாக எவ்வளவு கோடி லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்ற அவர்களது ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என ஓபிஎஸ் அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் தற்போது நடக்கப்போவது பொதுக்குழு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடும் குழுக் கூட்டம். பொதுக்குழு கடிதம் உண்மையாகவே கட்சியின் கடிதம்தானா அல்லது மோசடி கடிதமா என்று தெரியவில்லை. யாராவது கையெழுத்து போட்டு அனுப்பியிருந்தால் தான் நம்ப முடியும். அதுவும் அழைப்பிதழில் இரண்டு விதமாக போட்டிருக்கிறார்கள். கொரோனா அதிகமானால், காணொளி வாயிலாக பொதுக்குழு நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். தெளிவு இல்லாமல் யாரோ அனுப்பியிருக்கிற அழைப்பிதழை ஏற்று அந்த பொதுக்குழுவுக்கு நான் செல்ல மாட்டேன்.
எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு தலைவர் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி இணை இருங்கிணைப்பாளர். அதனால், எடப்பாடியோடு இணைந்து ஓபிஎஸ் செயல்படவில்லை என்று சொல்லவே அவருக்கு தகுதி இல்லை. அதிமுகவில் நடக்கும் மொத்த காரணத்துக்கும், சதிக்கும், கட்சிக்கு செய்கிற துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது அதிமுகவில் எத்தனை தேர்தல் வந்தது. உள்ளாட்சி தேர்தல் வாஷ் அவுட் ஆனது. தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளனர்.
கோடிக்கணக்கில் சம்பாதித்ததன் விளைவாக முன்னாள் அமைச்சர்களை மட்டும் கூட வைத்திருந்தால் இந்த கட்சி வளர்ந்துவிடுமா? எடப்பாடியுடன் இருப்பவர்கள் அவருடன் இணைந்து ஆயிரக்கணக்கான கோடி பணம் சம்பாதித்தவர்கள். அவர்கள் மட்டுமே எடப்பாடியுடன் உள்ளனர். அடுத்த வாரம் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கத்தான் போகிறேன். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கோடி லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள், எவ்வளவு தவறு செய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை நானே வெளியிடப் போகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய கோவை செல்வராஜ், ”ஜெயக்குமார் பேசும் போது, ஒரு தகுதி தராதரம் இல்லாமல் பேசுகிறார். சர்க்கஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக இரண்டு கோமாளிகள் வருவார்கள். அதுபோன்று ஒரு கோமாளி குடிகார கோமாளி. இன்னொரு கோமாளி இப்படிப்பட்ட கோமாளி. ‘உதவி கேட்டு வந்த பெண்களை மானபங்கப்படுத்தியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க வேண்டியவர். அவரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். ஜெயக்குமார் அன்று அமைச்சராக இருந்ததால் வழக்கு போடாமல் இருந்து விட்டனர். இப்போது அப்பெண்களை வழக்கு தொடுக்க வைத்து, அவரை சிறைக்கு அனுப்புவோம் என்று எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.