மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தையே பின்பற்ற வேண்டும். மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி-மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 15ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 61-100 மாணவர்கள் வரை இரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் ஒதுக்கீடு உள்ளதா? என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
முதுகலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்புகளில் மொழிப் பாடத்தில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள், இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் கீழ்நிலை வகுப்புகளுக்கு (9, 10ஆம் வகுப்பு) கற்பிக்க பாட வேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மொழிப்பாடத்தில் 24 பாட வேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் ஆசிரியருடன் உபரி பணியிடமாக இருக்குமாயின் அப்பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் இளையோரை ஆசிரியருடன் உபரியாக காண்பிக்கப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி பள்ளிக்கல்வித் துறைக்கு விவர அறிக்கை தர வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.