பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு நெருங்கும் நிலையில், உடனடியாக அவற்றை இணைக்குமாறு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏற்கனவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை அவகாசம் கொடுத்தும், அதை இணைக்காதோர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்தது. அதோடு கடந்த மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்போருக்கு ரூ.1000 அபராதமும் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது பொதுமக்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ள வருமான வரித்துறை ஜூன் 30ஆம் தேதி காலக்கெடுவை தவறவிட வேண்டாம் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 30.06.2023 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இன்றே உங்கள் பான் & ஆதாரை இணைக்கவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் தங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படாவிட்டால் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் தண்டனை நடவடிக்கைகளையும் அதனுடன் உள்ள அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும். இதனால் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) மற்றும் வசூலிக்கப்படும் வரி (டிசிஎஸ்) ஆகிய இரண்டும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிக விகிதத்தில் கழிக்கப்படும் அல்லது சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் அத்தகைய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வட்டி ஆகியவையும் வழங்கப்படாது. மேலும், பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மேலும் அபராதம் அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது. ஆதாருடன் இணைக்காமல் பான் எண்ணை பயன்படுத்தும் போது ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் தாமதிக்காது உடனடியாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.