மகாராஷ்டிரா சியோன் கோலிவாடாவில் பார்க் அருகே பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனும், 5 வயது சகோதரியும் கார் கதவைத் திறக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “சஜித் முகமது ஷேக் மற்றும் அவரது சகோதரி முஸ்கன் ஷேக் இருவரும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சியோன் கோலிவாடா, செக்டார் 5, சிஜிஎஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றுள்ளனர். தங்களது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சாலையில் ஓரத்தில் பழுதடைந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக் கொண்டனர். உள்ளே ஏறியதும் தானாக கதவு சாத்திக் கொண்டது. திரும்ப கதவைத் திறக்க முயற்சித்து முடியாமல் போயிருக்கலாம்.
காரில் இருந்து வெளியே வர அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அதற்கான வியர்வை மற்றும் போராட்ட அடையாளங்கள் கார் கண்ணாடிகளிலும், கதவிலும் இருந்தன. குழந்தைகளின் உடல்கள் சில மணிநேரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன. மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது” என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரியும் குழந்தைகளின் தந்தை மொஹபத் ஷேக் கூறுகையில், “ஜித்தும் முஸ்கானும் அவர்களது தாயார் கூறியதன் பேரில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால், தாயார் அவர்களைத் தேடி வந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. என்னை அழைத்ததில் நானும் வீட்டிற்கு வெளியே சென்று குழந்தைகளைத் தேடத் தொடங்கினேன். என்னாலும் அவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், அவர்களைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இரவு 10 மணிக்கு போலீசார் வந்து எங்கள் தெருவிலேயே குழந்தைகளை தேடத் தொடங்கினர். இறுதியில், கைவிடப்பட்ட காரில் குழந்தைகள் கிடப்பதைக் கண்டறிந்தனர்.
டாஷ்போர்டு மற்றும் கதவில் உள்ள அடையாளங்களில் இருந்து அவர்கள் காரில் இருந்து அவர்கள் வெளியே வர முயற்சித்தது தெளிவாக இருந்தது. சிசிடிவி பதிவுகளில் இருவரும் தாங்களாகவே காரை நோக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்களுடன் வேறு யாரும் காணப்படவில்லை எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இனி குழந்தைகளுக்கு Horlicks, Boost வேண்டாம்..!! பாட்டி சொன்ன இந்த ஊட்டச்சத்து பவுடர் போதும்..!!