நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. ஆனால், வரும் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிட போகிறது என்று தெரியவில்லை. எனினும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டதால், சமகவில் உள்ள ஒருதரப்பினர் அதிர்ச்சி அடைந்து அதிமுகவில் இணைந்துவிட்டனர்.
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் அளித்திருந்த பேட்டியில், “எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கூறியிருந்தார்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் சரத்குமார் உறுதியாக கூறியிருந்ததால், ஒருவேளை, திமுகவுடன் இந்த முறை கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் நிலவியபடியே இருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க சரத்குமார் முடிவு செய்துள்ளாராம். அதாவது, நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதனால் அவர் பாஜக கூட்டணியின் இணைவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் தலைமையிலான சமக, 2021ஆம் ஆண்டு மநீம கூட்டணியில் போட்டியிட்டது. தற்போது தமிழக பாஜக தனி அணி அமைத்து வரும் நிலையில், சரத்குமார் அங்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.