இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதுவிதமான மோசடிகளும் அதிகரித்து வருகிறது. தற்போது பகுதி நேர வேலை மற்றும் முதலீடு என சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பகுதி நேர வேலை வேண்டுமா? என்று வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர்கள் தகவல் அனுப்புகின்றனர். இதற்கு நீங்கள் என்ன வேலை என்று கேட்டால் ஒரு வீடியோவுக்கான லிங்க்கை அனுப்புவார்கள். அதனை கீளிக் செய்தால் உடனடியாக டெலிகிராம் குழுவில் உங்களையும் சேர்த்து விடுவார்கள்.
அதில் பகுதி நேர வேலை மற்றும் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிப்பது என்று 2 வாய்ப்புகளை வழங்கி முதலில் முதலீடு செய்த பணத்திற்கு 30 முதல் 60 சதவீதம் வரை கமிஷன் தொகை தருவர். இந்த பணத்திற்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தால் மன்னிக்கவும் உங்கள் கணக்கு முடக்கப்பட்டு விட்டது ரூ.15 லட்சத்திற்கு 20% வருமான வரி செலுத்த வேண்டும் என்று ஒரு செய்தி வரும். அதன் பிறகு மர்ம நபர்களை நீங்கள் தொடர்பு கொள்ள இயலாது. எனவே புதுவித மோசடியில் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஈடுபட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.