சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டை முடித்துவிட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தார். இந்நிலையில் அங்கு நேற்று காலை 11 மணி அளவில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி 30 நிமிடம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 2026 தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று 5 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
நடந்த முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பினார். ஆனால் அன்புமணி, பாஜவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட விரும்பியதன் காரணமாகபாமக, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் கட்சி நிர்வாகிளிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கூடா நட்புகேடாக முடிந்ததாக கூறியுள்ளார். இதனால் இம்முறை அதிமுகவுடன் கூட்டணி சேர அவர் விரும்புவதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாகவும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அவரது மைத்துனரின் மகனுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றதாக பாமகவினர் கூறினர். இதை தொடர்ந்து மாஜி அமைச்சரான வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நீண்டநேரம் பேசினார்.