பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவுக்குள் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தானே இனி தலைவர் என்றும் அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, கடந்த 2 தினங்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகிகளும், குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், பாமகவின் கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும், “மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார். பாமக தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருமே மாநாட்டில் கலந்து கொள்வார்கள். கட்சிக்குள் சலசலப்பு இருந்தது அனைவருக்குமே தெரியும். அந்த பிரச்சனைகள் தற்போது சரியாகிவிட்டது. அந்த பிரச்னை மேலும் பெரிதாகாது” என்று தெரிவித்தார்.