அதிகரிக்கும் குறைப்பிரசவங்கள் தடுக்க கர்ப்பிணிகள் என்னென்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உலகளவில், 2020-ல் மட்டும் தோராயமாக 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குறைப்பிரசவம் முக்கிய காரணமாக உள்ளது. 2019 கணக்குப்படி, 9 லட்சம் குழந்தைகள்வரை இக்காரணத்தால் இறந்திருக்கலாம். உரிய மருத்துவ வசதி இருந்தால், இவர்களில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாம் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன.
குறைப்பிரசவங்களில் 3 வகைகள் உள்ளன. மிக மிக முன்கூட்டியே பிறந்த குழந்தை (28 வாரங்களுக்குள் பிறப்பது), மிகவும் குறைப்பிரசவம் (28 – 32 வார இடைவெளியில் பிறப்பது), இடைப்பட்ட காலம் (32 – 37 வார இடைவெளியில் பிறப்பது). இந்த நிலையில், குறைப்பிரசவம் ஏன் ஏற்படுகிறது என்றால், தாய் இதற்கு முன் பல பிரசவங்களை எதிர்கொண்டிருப்பது, தாய்க்கு ஏற்படும்தொற்றுகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பாதிப்புகள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
குறைப்பிரசவ குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, அவற்றிலிருந்து குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது, “குறைப்பிரசவக் குழந்தைகள் என்பதே ஒரு பிரச்னைக்குரிய விஷயம்தான். அவர்களுக்கு தாயின் கர்ப்பப்பையில் அவர்களுக்கு ஏதோ சிக்கல் இருந்ததால்தான் அவர்கள் விரைந்து வெளியே வருகின்றனர். விரைந்து அவர்கள் வெளியேவரும்போது உடலின் பல பகுதிகள் வளர்ச்சியடைந்திருக்காது.
குறிப்பாக நுரையீரல், கல்லீரல் போன்றவையெல்லாம் வளர்ச்சி பெற்றிருக்காது என்பதால் உடல் இயக்கமே சிரமத்துக்கு உள்ளாகும். இதைவிட முக்கியம், ஊட்டச்சத்து குறைபாடு. மேலும் இப்படியான குழந்தைகளுக்கு மூளையில் ரத்தநாளங்களும் மிக மிக சிறியளவு இருக்கும், மிகவும் வலுவிழந்தும் இருக்கும். ஆகவே ரத்தக்கசிவுக்கான வாய்ப்பும் அதிகம்.இவை எல்லாவற்றையும்விட முக்கியம், வெளியிலிருந்து அவர்களுக்கு தொற்று வருவது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவன அறிக்கையில், “பெரும்பாலான குறைப்பிரசவங்கள், தெற்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவில்தான் நிகழ்கின்றன. மிக மிக குறைப்பிரசத்தில் பிறந்த குழந்தைகள் (28 வாரத்துக்கு முன் பிறந்தவர்கள்) உயிர்பிழைக்கும் எண்ணிக்கை, நிலப்பரப்பை பொருத்து வேறுபடுகிறது. உதாரணத்துக்கு, குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் பிறக்கும் (குறைப்பிரசவத்தில்) 90% -க்கும் அதிகம் உயிரிழக்கின்றனர். அதிக வருமானம் கொண்ட நாடுகளெனில், 10%-க்கும் குறைவான குழந்தைகள் இறக்கின்றனர்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.