நடிகர் விஜய் தன்னுடைய பெயரில் மக்கள் இயக்கம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய்யின் அரசியல் வருகை பேச்சுக்கள் அதிகமாகியுள்ள நிலையில், அவருடைய செயல்பாடுகளும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே தொடர்ச்சியாக அமைந்திருக்கின்றன. சமீபத்தில் 234 தொகுதிகளில் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். பிறகு தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டத்தை தொடங்க உத்தரவிட்டிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வபோது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஒட்டியுள்ள போஸ்டரும் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் தமிழக முதல்வரானதாக போஸ்டரில் வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில், மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் விஜய் ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரான விஜய்க்கு கூட்டணி கட்சி தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன், அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தது போல் படம் இடம்பெற்றுள்ளது. மதுரை விஜய் ரசிகர்களால் அடிக்கப்பட்ட இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.