ஈரோடு மாநகரில் மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் தொழில் நடைபெறுவதாக வரும் தகவலை அடுத்து அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 1,000 ரூபாய் முதல் மசாஜ் செய்யப்படும் என கூறி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுனர்.
அப்போது மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மசாஜ் சென்டரின் ஊழியர்களான ரவிக்குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மசாஜ் சென்டருக்கு சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடி வருகின்றனர்.