மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்கான நிதியை வழங்குவோம் என கூறிய மத்திய அரசுக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் வெளியிட்ட அறிக்கையில்; மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்கான நிதியை வழங்குவோம் என நிபந்தனை விதிப்பதையும், தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வரும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர், மாணவர், மாதர் என அனைவரும் அணி, அணியாக திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.