புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்..
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார்.. அப்போது புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்றும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ.9,709 கோடி (94%) செலவிடப்பட்டுள்ளது என்று தமிழிசை கூறினார்..
ஆனால் ஆளுநர் உரையில் எந்த புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்றும், கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. இதையடுத்து ஆளுநர் உரை முடிந்ததும் புதுச்சேரி சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வேறு தேதி நடைபெறும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.. எனினும் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்த அறிவிப்பையும் சபாநாயகர் வெளியிடவில்லை.. புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் அவை ஒத்திவைக்கப்படதாக தெரிகிறது..