டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட எலக்டானிக்ஸ் பொருட்கள், துணிகள், உணவுப் பொருட்கள், பொம்மைகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் வாங்கி வருகிறோம். இந்நிலையில், தற்போது புதிதாக நீங்கள் காரையும் வாங்க முடியும் என்றால் நம்புவீர்களா? அட ஆமாங்க, பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஹூண்டாய் மாடல் கார்களை 2024ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே புக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இனி ஜாலியாக சோஃபாவில் அமர்ந்து கோண்டு, ஹாய் அலெக்ஸா..! எனக்கொரு கிரெட்டா காரை ஆர்டர் செய்..! என உத்தரவு போடலாம். ஆரம்பத்தில் இந்த வசதி அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இருந்தது. எனினும் நமக்கு கிடைத்த தகவலின் படி கூடிய விரைவில் பல நாடுகளுக்கும் இந்த வசதி கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. தற்போதைய நிலையில், அமெரிக்க வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான கார்களை அமேசான் தளத்தில் தேட முடிந்தாலும், கார் வாங்க வேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட டீலர்ஷிப்பிடம் தான் அவர்கள் நேரடியாக செல்ல வேண்டும்.
ஆனால் 2024 முதல் இந்தக் கவலை இல்லை. கார் வாங்கும் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் எந்தவித சிரமமும் இன்றி இ-காமர்ஸ் தளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்போது வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் உங்களுக்கு பிடித்த ஹூண்டாய் கார் மாடல்களை புக் செய்ய முடிவதோடு, அதிலேயே பணம் செலுத்தும் வழிமுறைகளையும் முடித்துகொள்ள முடியும். இனி வாடிக்கையாளர்கள் முன் இரண்டு ஆப்ஷன் மட்டுமே கைவசம் உள்ளது. காரை எடுப்பதற்கு அருகாமையில் உள்ள டீலர்ஷிப்பிடம் செல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் வீட்டு முகவரியை கொடுக்கும் பட்சத்தில், நீங்கள் தேர்வு செய்த காரை உங்கள் வீட்டின் வாசலுக்கே கொண்டு வந்துவிடுவார்கள்.
அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளம் ஒன்று கார் உற்பத்தியாளர்களோடு கைகோர்த்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இதுபோன்ற வசதியை கொண்டு வந்திருப்பது இதுதான் முதல்முறை. இதைப் பார்த்து கூடிய விரைவில் மற்ற இ-காமர்ஸ் தளங்களும் இந்த வசதியை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். ஆட்டோமொபைல் போன்ற அதிக விலையுள்ள தயாரிப்புகளை டிஜிட்டல் தளங்கள் மூலம் வாங்கும் போக்கும் கொரோனா காலகட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான் பல நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை அதிகப்படுத்தி கொண்டன.
இந்தியாவிலும் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை பிரபல இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. அதே சமயத்தில் இன்றைய தேதி வரை எந்தவொரு கார் உற்பத்தியாளர்களும் இ-காமர்ஸ் தலங்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்யும் முடிவை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.