மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த நேரடியாக மட்டுமின்றி, இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. அதே போல, கைப்பேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியிலேயே மின் கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்தலாம்.
மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு வந்ததும், அதில் இருக்கும் இணைப்பை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதன் அருகில் உள்ள பெட்டியில் கேப்சா உள்ளிட வேண்டும். இதையடுத்து கட்டணம் செலுத்தும் செயல் முறை தொடங்கும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து, அதன் பின்னர் மின் கட்டணத்தை செலுத்தி விடலாம். இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தைச் செலுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை தற்போது 83% நுகர்வோர் மின்னணுமுறையில் செலுத்துகின்றனர். கடந்த 2023-24-ம் ஆண்டில் மின்னணு முறையில் செலுத்தப்பட்ட கட்டணம் மூலம் ரூ.50,217 கோடி வருவாய் கிடைத்தது. முந்தையை ஆண்டைவிட இது 31 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.