ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. 1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998-ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.
அமேதி களத்தில் 1999-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004-ல் முதன்முறையாக களம் இறங்கினார். அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019-ல் ராகுலை தோற்கடித்தார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறக் கூடாது என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில்; முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ வேண்டாம். சீனாவால் லடாக் கைப்பற்றப்பட்டதில் மோடி சீனாவிடம் சரணடைந்ததற்காகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் சீனாவின் நீண்ட காலக் கைக்கூலிகளாக நிதிப் பலன்களைப் பெறுகிறார்கள் காங்கிரஸ். எனவே ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அங்கு பாஜக வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற செய்ய வேண்டும்.