ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவின் முதல் கட்டம், மக்களுடன் தொடர்பு கொள்வதையும், அவர்களின் குறைகளை புரிந்துகொள்வதையும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆதரவைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது. முதல் கட்ட யாத்திரையின் போது, ராகுல் காந்தி 14 மாநிலங்களில் 130 நாட்களுக்கும் மேலாக பாதயாத்திரையாக பயணம் செய்தார்.
நடிகர்கள் அமோல் பலேகர், ரியா சென், ஸ்வரா பாஸ்கர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ராகுல் காந்தியுடன் இணைந்தனர். தமிழகம், கேரளா கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களை ராகுல் காந்தி முதல் கட்ட யாத்திரையின் போது பார்வையிட்டார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைந்தது. இது 130 நாட்களுக்கு மேல் நீடித்தது மற்றும் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இந்த நிலையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டம் குஜராத் மாநிலத்தில் இருந்து விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. யாத்திரைக்கான பாதை மற்றும் தொடர்புடைய தேதிகள் பற்றிய விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.