மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்சாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மழை, மின்னல், காற்று காலங்களில் பொதுமக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது என தெரிவித்துள்ளது.
* ஈரமான கைகளால் மின் ஸ்விட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
* வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார ஸ்விட்சுகள் எதையும் தொடக்கூடாது.
* வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
* மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக் கூடாது.
* மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டேவயரின் மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
* ட்ரான்ஸ்ஃபார்மர் எனும் மின் மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
* அறுந்து இருக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அருகிலும் செல்லக் கூடாது.
* மற்றவர்களையும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டு உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
* தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதனப் பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும்.
* வீட்டில் துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்தவொரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக் கூடாது.
* பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும் வகையில் வீடு கட்டுமானங்களில் (ELCB) நிலகசிவு மின்திறப்பான் கருவிகளை பொருத்த வேண்டும்.
* மின் கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளில் ஆடு, மாடுகளை போன்ற கால்நடைகளை கட்ட வேண்டாம்.
* பேருந்து, லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழ் பகுதியிலோ நிறுத்தக் கூடாது.