இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். சில போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர், பிரதமர் பதவி விலகும் வரை வீட்டை விட்டு வெளியேறமாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் அவர் அதிகாரப்பூர்வ முறையில் அறிவித்துள்ளார். அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் தப்பியோடினார். தற்பொழுது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியா தனது ராணுவ உதவி தேவைப்பட்டால் வழங்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் சுதந்திரமான தேர்தலில் தெரிவு செய்யப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்..? அப்போது நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. ராஜபக்சேவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் இந்தியா கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.